ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-31 22:45 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ளது ஆனந்தகுடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் ஹிஸ்ஸா ஏரி அமைந்துள்ளது. ஏரிக்கு வெள்ளாற்றின் குறுக்கே உள்ள பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இதன் மூலம் முத்துகிருஷ்ணாபுரம், ஆனந்தகுடி, ஆத்தூர், வேட்டக்குடி, புத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஏரியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவை, அதேபகுதியை சேர்ந்த தனிநபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக தெரிகிறது. இதனால் ஏரியில் முழுமையாக தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு ஏரியும் தூர்ந்து போய் கிடந்தது. எனவே ஏரியை தூர்வாருவதுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரி க்கை விடுத்து வந்தனர்.

இந்த ஆண்டு ஏரி முழுவதும் நிரம்பாததால், தற்போது விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏரியை தூர்வாராததால் தான் அதிகளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் போனதாக கூறி, ஆனந்தகுடி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து, விருத்தாசலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி செயற்பொறியாளர் சண்முகம், கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஆக்கிரமிப்பை அகற்றி ஏரி முழுவதையும் தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உதவி செயற்பொறியாளர் சண்முகம் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்