சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

விதை ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-31 23:15 GMT
தாராபுரம்,

தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், தாளக்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, தனியார் சீட்ஸ் நிறுவனத்தின் மூலம், நெல் சாகுபடி செய்வதற்காக விதை நெல் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தங்கள் நிலங்களில் அந்த விதை நெல்லை சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் பயிருக்கு 120 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், நெல் பயிரில் கதிர்கள் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற்று தரக்கோரி தமிழக கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து தலைமையில் தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இது குறித்து விவசாய சங்கத் தலைவர் காளிமுத்து கூறியதாவது :- தாராபுரம்-திருப்பூர் சாலையில் உள்ள தனியார் விதை பண்ணையில் விதை நெல் வாங்கி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளார்கள். தரமற்ற நெல் விதையால்தான் 120 நாட்கள் ஆகியும் கதிர்கள் வரவில்லை. இங்குள்ள விதை சுத்திகரிப்பு நிலையங்களில், அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல், தரமற்ற விதைகளுக்கு தகுதி சான்று வழங்கி உள்ளனர். இதனால் தான் தரமற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமராவதி பாசனத்திலும் தரமற்ற விதைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் விதைப்பண்ணைகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தகவல் அறிந்த அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்