ஆந்திராவில் இருந்து கோவைக்கு 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கோவைக்கு 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-02-01 22:11 GMT
கோவை,

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கோவை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்த ரெயிலில் கையில் பையுடன் இறங்கிய 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நூர்மதி கிராமத்தை சேர்ந்த வந்தலராஜு (வயது 30), கொண்டா பாபு (41) என்பதும், அவர்கள் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான 2 பேரும் ஆந்திராவில் முக்கிய கஞ்சா வியாபாரிகள் ஆவார்கள். இவர்கள் கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவுடன் கோவை வந்து உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. எனவே குற்றசெயலில் ஈடுபடுவதை மாணவர்கள் கைவிட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க ரகசிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்