இடங்கணசாலையில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

இடங்கணசாலையில் குடிநீர் கேட்டு, பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-02 21:45 GMT
இளம்பிள்ளை,

இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சியில் தூதனூர், நாப்பாளையம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இடங்கணசாலை குடோன் பகுதியில் உள்ள இருப்பாளி கூட்டுக்குடிநீர் திட்ட நீரூந்து நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நீருந்து நிலைய பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து அனுமதியின்றி குடிநீர் இணைப்புகளை சிலர் எடுத்து பயன்படுத்தி வருவதாகவும், இதனால் தூதனூர், நாப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக கடந்த வாரம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ரோகிணியிடம் அவர்கள் நேரில் முறையிட்டனர். மேலும் இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அந்த பகுதியில் உள்ள முறைகேடான குடிநீர் இணைப்புகளை துண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் தூதனூர், நாப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரியும், குடிநீர் கேட்டும் இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இருப்பாளி கூட்டுக்குடிநீர் திட்ட உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாகவும், உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்