குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-02 22:30 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அய்யனேரி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து இந்த கிராம மக்கள் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் அய்யனேரி கிராமம் சோளிங்கர்- பரவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த கிராமத்தில் புதிய ஆழ்துளைகிணறு அமைத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்