ரோட்டில் `ஆப்பாயில்' போட்ட பெண்கள் - சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் முட்டையை உடைத்து ரோட்டில் `ஆப்பாயில்' போட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-28 11:26 GMT

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி அறிவுறுத்தி உள்ளார். சேலம் மாவட்டத்தில் 23-ந் தேதி இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக 108.2 டிகிரி வெயில் பதிவானது.

இதனிடையே, வெயிலின் தாக்கத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் கடந்த 25-ந் தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அசோக ஸ்தூபி பகுதியில் 2 பேர் முட்டைகளை உடைத்து ஆப்பாயில் போட முயன்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்பாயில், ஆம்லெட் போடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறதா? என அந்த வீடியோவை பார்த்தவர்கள் வியப்படைந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் சில பெண்கள் ஒன்றாக சேர்ந்து கொளுத்தும் வெயிலுக்கு ரோட்டில் முட்டையை உடைத்து ஆப்பாயில் போட்ட சம்பவம் நடந்தது. அதாவது ஒரு பெண் சாலையில் எண்ணெயை ஊற்றுவதும், அதன்பிறகு மற்றொரு பெண், முட்டையை உடைத்து ஆப்பாயில் போட்டு அதனை கிளறி விடுகிறார். இதனை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரித்தபடி சென்றனர்.

ரோட்டில் பெண்கள் ஆப்பாயில் போட்டதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. வெயிலின் தாக்கத்தை உணர்த்தவும், மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி ரோட்டில் முட்டையை உடைத்து ஆப்பாயில் போட்டதாகவும், மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் அந்த பெண்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்