தர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்

தர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரியில் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-04 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் வரவேற்று பேசினார்.

இந்த ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தும், 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்தும் போலீசார், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவக்கல்லூரி, நெசவாளர் நகர் வழியாக 4 ரோடு வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின்போது போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மோட்டார்வாகன ஆய்வாளர்கள் மணிமாறன், ராஜாமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

ஏரியூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பள்ளி அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு கடைவீதி, சந்தை உள்ளிட்ட வழியாக சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தனர். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

இதேபோல் அரூர், பாலக்கோடு, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்