கஞ்சா பொட்டலத்துடன் முதல்-அமைச்சரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி சங்கர் பாண்டியனை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-29 06:22 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்காக கோடை வாசஸ்தலங்கள் உள்பட சுற்றுலாத்தலங்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஓய்வுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று கொடைக்கானல் புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் வீட்டில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் வெளியே வந்தபோது பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் கஞ்சா பொட்டலத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாஜக நிர்வாகியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சங்கர் பாண்டியனை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் வந்ததாக பாஜக நிர்வாகி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரபாண்டியன் கையில் இருந்த கடிதத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள், கூலி தொழிலாளர்கள், சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் குற்றசெயல் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்கள் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்