கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்

சேதுபாவாசத்திரம் அருகே கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்காத இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2019-02-04 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே தில்லங்காடு கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

பள்ளத்தூர், சொக்கநாதபுரம், புக்கரம்பை ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு குலதெய்வமாக இக்கோவில் அய்யனார் அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் சிலைகள் கிடையாது. ஆண்டுதோறும் சாமி சிலைகளை மண்ணால் புதிதாக செய்து வைத்து திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இக்கோவில் கடந்த 10 ஆண்டுகளாக சிதிலம் அடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து தில்லங்காட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு கோவிலை புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்