கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி-பரபரப்பு

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-02-04 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் ஆசாரிமார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர், தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 38). இவர் நேற்று தனது மகன் ராமகிருஷ்ணன் மற்றும் தாயார் அழகம்மாள் என்பவருடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அங்குள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன் நின்று கொண்டிருந்தார். திங்கட்கிழமை மக்களிடம் மனுக்கள் வாங்கும் நாள் என்பதால் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் லட்சுமி திடீரென மண்எண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஓடினார். பின்னர் கேனில் தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி விட்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதைப் பார்த்த மக்கள், உடனே அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். அதன் பிறகு அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து லட்சுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில், “நான் கடந்த ஆண்டு 3 பேரிடம் வட்டிக்கு பணம் வாங்கினேன். இதற்காக மாதா மாதம் கந்து வட்டி கட்டி வருகிறேன். ஆனால் தற்போது என்னால் வட்டி செலுத்த முடியவில்லை. இதனால் வாங்கிய அசலை கொடுத்து விடலாம் என்றால் அவர்கள் பணத்தை வாங்க மறுக்கிறார்கள். தொடர்ந்து வட்டி கட்டும் படி வற்புறுத்துகிறார்கள். எனவே கந்து வட்டி கொடுமையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும்” என்று கூறியபடி கண்ணீர் விட்டு அழுதார். அப்போது லட்சுமியின் தாயார் அழகம்மாளும் உடன் இருந்தார். மேலும் இதுதொடர்பாக புகார் மனுவும் எழுதி வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து லட்சுமியை முதலுதவிக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்