பெரிச்சிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியல்

பெரிச்சிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Update: 2019-02-04 22:30 GMT
கீரனூர், 

பழனியை அடுத்த பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருப்பவர் ராஜா. இவர், மாணவ-மாணவிகளை அவதூறாக பேசுவதாகவும், ஆசிரியைகளுக்கு எதிராக கடிதம் எழுத மாணவிகளை வற்புறுத்துவதாகவும் கூறி மாணவ-மாணவிகளின் பெற்றோர் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜாவுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பை சேர்ந்த பெற்றோர் சிலர் நேற்று பழைய தாராபுரம் சாலையில் பெரிச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளியில் வேலை பார்க்கும் சில ஆசிரியைகள் ராஜாவை அவதூறாக பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதையறிந்த அவர்கள் மாணவர்களின் பெற்றோர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். எனவே ராஜாவின் புகார் மீது மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். அதையடுத்து பேசிய போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்