ஆத்தூரில் புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு - சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

ஆத்தூரில் புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலுக்கு முயன்றதால் பர பரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-05 22:35 GMT
ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 32-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் சடையப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக நேற்று நண் பகல் 12 மணியளவில் ஒரு லாரியில் மதுபாட்டில்களும், ஊழியர்களுக்கு தேவையான சேர், டேபிள் உள்ளிட்ட பொருட்களும் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து லாரியில் இருந்து மதுபாட்டில்களின் அட்டை பெட்டிகளை ஊழியர்கள் டாஸ்மாக் கடைக்குள் எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர், அவர்கள் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்றும், அதையும் மீறி கடை திறக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள், மதுபாட்டில்களை கடைக்குள் எடுத்து செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆத்தூர் லீபஜாரில் உள்ள சேலம்-கடலூர் சாலைக்கு சென்று திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலுக்கு முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

அப்போது, அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் மேலாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி டாஸ்மாக் கடையை திறக்காமல் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்