நாடு பின்னோக்கி செல்ல காரணமாக இருந்த பா.ஜ.க. அரசை மக்கள் அகற்ற வேண்டும் நாராயணசாமி பேட்டி

நாடு பின்னோக்கி செல்ல காரணமாக இருந்த பா.ஜ.க. அரசை வரும் தேர்தலில் மக்கள் அகற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2019-02-06 23:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா ஆண்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி.கே.வாசன் ஒரு கட்சியின் தலைவர். அவர் காங்கிரசுக்கு வருவாரா? என அவரிடம் தான் கேட்க வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சியினரை பலி வாங்கும் நடவடிக்கையில் மதிப்புமிக்க சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, மேற்கு வங்காளத்தில் ஒரு மாநில முதல்-மந்திரி வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் உருவாகியது.

பா.ஜ.க. அரசு தொழில் முனைவோர்கள், வணிகர்கள், சிறுபான்மையினர், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகிய நடவடிக்கைகள் மூலம் நாட்டை பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, 9 சதவீதமாக இருந்த நாட்டின் வளர்ச்சி விகிதம், பா.ஜ.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்துவிட்டது. இதை சரிசெய்ய அடுத்து வரும் ஆட்சியாளர்களுக்கு ஓராண்டாகும். நாடு பின்னோக்கி செல்ல காரணமாக அமைந்த பா.ஜ.க. அரசை வரும் தேர்தலில் ஆட்சியிலிருந்து மக்கள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்