வேலூரில் ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பம் பெற ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தள்ளுமுள்ளு, போலீஸ் விரட்டியடிப்பு

வேலூரில் நேற்று ஊர்க்காவல் படையில் சேருவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

Update: 2019-02-07 23:30 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், இதற்கான விண்ணப்பம் நேற்றும், இன்றும் (வியாழன், வெள்ளி) ஆகிய 2 நாட்கள் வேலூரில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அறிவித்திருந்தார். மேலும் 10–ம் வகுப்பு படித்த 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி வேலூர் தலைமை தபால் அலுவலகம் அருகில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்று விண்ணப்பம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் வாங்குவதற்கு அதிகாலை முதலே இளைஞர்கள் குவியத்தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி விண்ணப்பம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது வேலூர் சரக ஊர்க்காவல் படை தளபதி வி.என்.டி.சுரேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் விண்ணப்பம் பெறுவதற்காக முண்டியடித்து சென்றனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் ஊர்க்காவல் படை அலுவலக கேட்டை பூட்டினர்.

உடனே இளைஞர்கள் சுற்றுச்சுவர் வழியாகவும், பூட்டப்பட்ட கேட் வழியாகவும் ஏறிகுதிக்க தொடங்கினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்து விட்டனர்.

இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார், விண்ணப்பம் வாங்க குவிந்திருந்த இளைஞர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து விண்ணப்பம் வழங்குவது நேதாஜி விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு, விண்ணப்பம் பெற வந்தவர்களை நேதாஜி விளையாட்டு அரங்கத்திற்கு செல்லுமாறு கூறினர்.

அதைத்தொடர்ந்து அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த விண்ணப்பம் பெற வந்தவர்கள் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டனர். விளையாட்டு அரங்கத்திற்குள் இருந்து தீயணைப்பு நிலையம் வரை வரிசையில் நின்றனர். பின்னர் 3 ஆயிரம் பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்