பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றால் தான் விபத்துகளை தடுக்க முடியும் வட்டார போக்குவரத்து அதிகாரி பேச்சு

பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றால் தான் விபத்துகளை தடுக்க முடியும் என திருவாரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் கூறினார்.

Update: 2019-02-07 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி வாகன டிரைவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் அரசு தலைமை கண் டாக்டர் ராஜா கலந்து கொண்டு டிரைவர்களுக்கு உரிய கண் பரிசோதனையை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் செயலாளர் வரதராஜன் முதலுதவி சிகிச்சை குறித்து பேசினார். இதில் உதவி கண் டாக்டர் வாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு 63 ஆயிரத்து 920 விபத்துகள் நடந்துள்ளள. இதில் 12 ஆயிரத்து 216 பேர் உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டில் 908 விபத்துக்கள் நடைபெற்று, இதில் 169 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் 964 விபத்துகள் நடைபெற்று, இதில் 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது. விபத்துகளை தடுத்திட சாலை விதிமுறைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். பாதுகாப்பு பயணம் என்பது மிக முக்கியமானது. உரிய வயதில் டிரைவர்கள் அனைவரும் அவசியம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றால் தான் விபத்துகளை தடுக்க முடியும்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

முகாமில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வேன், கார், ஆட்டோ டிரைவர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முன்னதாக வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் வரவேற்றார். முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் சக்திபாஸ்கரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்