திருச்சி விமான நிலையத்தில் ரூ.17½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 3 பெண் பயணிகள் சிக்கினர்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பெண் பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2019-02-07 23:00 GMT
செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் வரும் பயணிகளையும், விமானத்தில் பயணிக்க செல்லும் பயணி களையும் அவர்களின் உடைமைகளையும் கடும் சோதனைக்கு பின்னரே அதிகாரிகள் விடுவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சோதனையின்போது பயணிகள் சிலர் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி கடத்தி வருவது கண்டறியப்பட்டு சிக்கி இருக்கிறார்கள்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜீனத் பேகம், ஷகிலா பானு ஆகியோர் 200 கிராம் தங்க சங்கிலிகளை உடைமைகளில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் ஆகும்.

மேலும் அதே விமானத்தில் பயணித்த திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா மேரி என்பவரும் தனது உடைமைகளுக்குள் 324 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். தங்கம் கடத்தி வந்ததாக பிடிபட்ட 3 பெண்களிடமும் தொடர்ந்து மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி விமான நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு தங்கம் கடத்தலுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்து அவர்களை கூண்டோடு இடமாற்றம் செய்தனர். அதன்பின்னர் விமான பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இடையில் சிறிது காலம் கடத்தல் சம்பவம் இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக விமானங்களில் வரும் பயணிகளிடம் கடத்தல் கும்பல் தங்கத்தை பார்சல்போல கொடுத்து அனுப்புவதும், அவற்றை பயணிகள் ‘குருவி’ போல கொண்டு வந்து சேர்க்க வேண்டியவர்களிடம் சேர்த்து கணிசமான தொகையை பெறுவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் கடத்தல் மீண்டும் தொடர்கதையாகி வருகிறது. கடத்தல் கும்பல் பேர்வழிகள் யார்? என கண்டறியும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாக விமான நிலைய வட் டாரங்கள் தெரிவித்தன. 

மேலும் செய்திகள்