தென்னை நார் தொழிற்சாலையில் விபத்து, எந்திரத்தில் சேலை சிக்கி பெண் சாவு

தென்னை நார் தொழிற்சாலையில் எந்திரத்தில் சேலை சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார். உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-02-13 22:45 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி-கோவை ரோடு சேரன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை, பொள்ளாச்சியில் உள்ள சாத்துப்பாறை சித்தூரில் செயல்பட்டு வருகின்றது. இங்கு பொள்ளாச்சியை அடுத்த நல்லூர் முருகன் நிலையம் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி சகுந்தலா (வயது 50) என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். சகுந்தலா கயிறு திரிக்கும் பகுதியில் தென்னை நாரை போடும் பணியில் ஈடுபட்டார். அவர் கீழே குனிந்து தென்னை நாரை எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக காற்றில் சேலை பறந்து எந்திரத்தில் சிக்கி கொண்டது. மேலும் சேலை அவரது கழுத்தை இறுக்கியது. இதில் சகுந்தலா, கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சகுந்தலாவை உடனே மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார், தொழிற்சாலைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாக உரிமையாளர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்