இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு: பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த முயன்ற தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-14 21:45 GMT
காட்டுமன்னார்கோவில்,

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வரையிலான 30 கி.மீட்டர் சாலையை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் காட்டுமன்னார்கோவில் அருகே வீரநத்தம் பகுதியில் சாலை அமைக்க அப்பகுதியில் உள்ள நிலங்களை சமப்படுத்துவதற்காக ஊழியர்கள் 2 பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர். அப்போது அவர்கள் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த வீராணம் ஏரி பாசன விவசாய சங்க தலைவர் பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் முனுசாமி, நிர்வாகிகள் மனோகரன், கிருஷ்ணமூர்த்தி, செல்வமணி மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.

அப்போது அவர்கள், பயிர்களை சேதப்படுத்தி நிலங்களை உடனடியாக சமப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் எங்கள் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மேலும், உளுந்து பயிர்களை சாகுபடி செய்துள்ளோம். அதற்குள் நிலங்களை கையகப்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே நிலம் கையகப்படுத்தும் பணியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி, பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை மேலாளர்(பொறுப்பு) லோகேஷ், நிலஎடுப்பு தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், கடந்த 2 ஆண்டுகளாக மழையில்லாமலும், தண்ணீர் இல்லாமலும் கடும் அவதியடைந்து வந்தோம்.

இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை அழித்தால் நாங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவோம். மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக அரசு சார்பில் எங்களுக்கு வரவேண்டிய இழப்பீடு கிடைக்கவில்லை. எனவே சம்பா அறுவடை, உளுந்து அறுவடை பணிகள் முடிவடைந்த பிறகும், அரசு சார்பில் இழப்பீடு கொடுத்த பிறகும் தான் சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து விட்டு, பொக்லைன் எந்திரங்களுடன் அங்கிருந்து சென்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்