இந்து எழுச்சி முன்னணி சார்பில் காதலர் தினத்தை எதிர்த்து கழுதைகளுக்கு திருமணம்

இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.

Update: 2019-02-14 22:30 GMT
தேனி,

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காதலர் தினத்துக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காதல் என்ற பெயரில் பொது இடங்களில் அத்துமீறல், கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருவதாக கூறி காதலர் தினத்தை அவர்கள் எதிர்க்கின்றனர்.

இந்தநிலையில், காதலர் தினமான நேற்று தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. இதற்காக 2 கழுதைகளை குளிப்பாட்டி அழைத்து வந்தனர். அந்த கழுதைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர், காதலர் தினத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, நிர்வாகி ஒருவர் கழுதைக்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார். சுற்றி இருந்த நிர்வாகிகள், கழுதைகளின் மீது அட்சதை தூவினர். இந்த நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ராமராஜ், தேனி நகர தலைவர் வெங்கலப்பாண்டி, ஒன்றிய செயலாளர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் பொது இடங்களில் அத்துமீறும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தாலிக்கயிறுடன் வைகை அணை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர். ஆனால், அங்கு காதல் ஜோடிகள் யாரும் அவர்கள் கையில் சிக்கவில்லை.

மேலும் செய்திகள்