சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே பட்ஜெட் மசோதா நிறைவேறியது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கும் ஒப்புதல்

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் 2-வது நாளாக நேற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கடும் அமளிக்கு இடையே பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-02-14 23:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் 2-வது நாளாக நேற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கடும் அமளிக்கு இடையே பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 6-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.

சிறப்பு விசாரணை குழு

ஆடியோ உரையாடல் விவகாரம் குறித்து சட்டசபையில் 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதில் அதுகுறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் சபையில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று காலை 11.45 மணிக்கு தொடங்கியது.

கோஷங்களை எழுப்பினர்

கூட்டம் தொடங்கியதும் பா.ஜனதா உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கை அமைந்துள்ள பீடத்தை முற்றுகையிட்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரீத்தம்கவுடா வீட்டின் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசினார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் கோஷமிடுவதை சிறிது நேரம் நிறுத்தி னர். அந்த நேரத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

கொலைவெறி தாக்குதல்

எங்கள் கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.எல்.ஏ. பிரீத்தம்கவுடா வீட்டின் மீது ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சுமார் 400 பேர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த பீதியடைந்துள்ள னர்.

எங்கள் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுடன் நான் நேற்று ஹாசனுக்கு சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து தைரியம் கூறிவிட்டு வந்துள்ளேன். கல்வீச்சில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குண்டர்களை அனுப்பி...

அவர் ஹாசனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேல்-சிகிச்சைக்காக அவரை பெங்களூருவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளார். அவரது தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் குண்டர்களை அனுப்பி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது போலீசார் இருந்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கவர்னரை நேரில் சந்தித்து மனு கொடுத்துவிட்டு சபைக்கு வந்துள்ளோம்.

விசாரணை நடத்த வேண்டும்

எங்கள் கட்சியின் பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஒரு பெண் எங்கள் கட்சியினர் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சரியல்ல.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

சபாநாயகர் உத்தரவு

இதையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமார் பேசினார். அவர் கூறுகையில், “பா.ஜனதாவை சேர்ந்த பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழு பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். இனிமேல் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

சபாநாயகர் பேசி முடித்ததும் பா.ஜனதா உறுப்பினர்கள் மீண்டும் கோஷங்களை எழுப்பினர். பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ. வீட்டின் மீது நடந்த தாக்குதல் சம்பவம் மற்றும் ஆடியோ உரையாடல் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கும் மாநில அரசின் முடிவை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

கூச்சல்-குழப்பம்

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. கடும் அமளி உண்டானது. இந்த அமளிக்கு இடையே பட்ஜெட் (நிதி) மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேறியது.

அதே போல் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமின்றி சில சட்ட மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு சட்டசபை குழுக்களும் அறிக்கைகளை தாக்கல் செய்தன.

அதைத்தொடர்ந்து சபாநாயகர், சபையை பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தார். அதன் பிறகு சட்டசபை பகல் 3 மணிக்கு கூடியது.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அப்போதும் பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சட்டசபை, பா.ஜனதாவினரின் போராட்டத்தால் ஒரு நாள் முன்னதாகவே நேற்றுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்