வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம், பி.முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பி.முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2019-02-15 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.முருகன் தலைமையில், கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து கிராமங்களில் எருது விடும் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக இந்த எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் எருது விடும் விழா நடந்து வருகிறது.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போதிநாயனப்பள்ளி, பெரியதக்கேப்பள்ளி, முதுகுறுக்கி, நீலகிரி, தேரிப்பள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட கிராமங்களில் எருது விடும் விழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி அவர்களுக்கு எருது விடும் விழா நடத்த இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை.

அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மேற்கண்ட கிராம மக்கள் எருது விடும் விழாவை நடத்திட விரும்புகிறார்கள். எனவே எனது வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் எருது விழா நடத்திட அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் பிரபாகர், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முருகன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்