அம்பை தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

அம்பை தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-15 22:00 GMT
அம்பை, 

அம்பை தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கீழ சிவந்திபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் துரை (வயது 27). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி திலகவதி மற்றும் மகன்கள் மாரிசெல்வம், வெற்றிவேல், அம்பேத் ஆகியோருடன் அம்பை தாலுகா அலுவலகம் முன்பு, மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதுகுறித்த அறிந்த தாலுகா அலுவலர்கள் மற்றும் அம்பை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் இருந்த மண்எண்ணையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது போலீசார் தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர். அப்போது துரை கூறியதாவது:-

காரணம் என்ன?

நான் காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருகிறேன். என்னை அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் இங்கு வசிக்க கூடாது என்று மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து நான் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

பின்னர் அம்பை தாசில்தார் ராஜேஸ்வரியிடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டும், அந்த இடத்திலேயே வசிக்க அனுமதி கேட்டும் கோரிக்கை விடுத்தேன். அப்போது அவர் அரசு இடத்தில் வசிப்பது சட்ட விரோதமாகும்.

உடனே நீங்கள் அந்த இடத்தை காலி செய்யுங்கள் என்றும், உங்களுக்கு வேறு இடத்தில் வசிக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் மனமுடைந்த நான், எனது மனைவி மற்றும் மகன்களுடன் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்