கடலூரில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கடலூரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-02-15 22:45 GMT
கடலூர்,

புவனகிரி அருகே உள்ள காந்திநகரில் கன்னிமார் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஆதிதிராவிட மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் இக்கோவிலை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள். வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் அங்கு மாசிமக திருவிழாவை நடத்த உத்தேசித்திருந்த நிலையில் கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் ஆதிதிராவிட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் அவர்கள் நேற்று கடலூருக்கு திரண்டு வந்து, இம்பீரியல் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் தலைமையில், மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், புரட்சி கதிர், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டம் பற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சம்பவ இடத்துக்கு வராததால் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. பின்னர் அவர்கள் சமாதானமாகி அலுவலக உதவியாளரிடம் மனு கொடுத்து விட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் அன்புசெல்வனையும் சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்