பொன்னமராவதி அருகே பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி அருகே பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-15 22:15 GMT
பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தூத்தூர் ஊராட்சி உள்ளது. தூத்தூர் வழியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 3 பஸ்கள் சென்று வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் பஸ்கள் தூத்தூர் வழியாக செல்வதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வெளியூர்களுக்கு செல்பவர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தூத்தூர் பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அப்போது அதிகாரிகள் மனப்பட்டி, தூத்தூர் சாலை மிக மோசமாக இருப்பதனால் அந்த வழியில் பஸ்கள் சென்றால் பஸ்களுக்கு பெரும் சேதம் ஆகும் என கூறினர்.

இந்நிலையில் கொப்பனாபட்டி-ஆலவயல் செல்லும் சாலையில் வேலை நடை பெறுவதால், அந்த வழியாக செல்ல வேண்டிய பஸ்கள் தூத்தூர் வழியாக சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் அந்த வழியாக வந்த பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தூத்தூர் வழியாக மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் பொதுமக்களிடம் உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மனுவை போலீசாரிடம் வழங்கினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கொப்பனாபட்டி-ஆலவயல் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்