விழுப்புரம் அருகே குடிபோதை தகராறில் தொழிலாளி கொலை - வாலிபர் கைது

விழுப்புரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-18 22:45 GMT
விழுப்புரம், 

விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 60). இவர் விழுப்புரம் அருகே எருமனந்தாங்கல் பகுதியில் உள்ள சொக்கலிங்கம் என்பவருடைய நிலத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சாமிக்கண்ணு, அதே நிலத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமிக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சாமிக்கண்ணுவும் எருமனந்தாங்கலை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திக்கேயனும் (35) அவ்வப்போது இரவு நேரங்களில் நிலத்தில் வைத்து மது குடித்து வந்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் சாமிக்கண்ணுவை கார்த்திக்கேயன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

அதன் அடிப்படையில் கார்த்திக்கேயனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு நிலத்தில் வேலைகள் முடிந்ததும் சாமிக்கண்ணுவும், கார்த்திக்கேயனும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர்.

அப்போது குடிபோதையில் இருந்த சாமிக்கண்ணு கார்த்திக்கேயனின் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக்கேயன், அருகில் கிடந்த சவுக்கு குச்சியை எடுத்து சாமிக்கண்ணுவின் நெற்றியில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக்கேயனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்