புதுக்கோட்டை மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்வேன் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் பேட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நான் பணியாற்றுவேன் என புதிதாக பொறுப்பெற்று கொண்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.

Update: 2019-02-18 23:00 GMT
புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, புதுக்கோட்டை கலெக்டராக பணியாற்றி வந்த கணேஷ் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ள கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பொறுப்பெற்று கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கிய மாவட்டம். விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டு உள்ள மாவட்டம் புதுக்கோட்டை. அரசின் திட்டங்கள் யாவும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையிலும், பின்தங்கி உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நான் பணியாற்றுவேன்.

இதேபோல கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரையில் நிவாரணம் கிடைக்காத மக்களுக்கு, புயல் நிவாரணம் கிடைக்கவும், புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையான கூடுதல் உதவிகளை அரசிடம் கேட்டு பெறுவதோடு, மக்களின் மறுவாழ்விற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்