கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சஜாக்’ ஆபரேஷன் போலீசார் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க ‘சஜாக்’ ஆபரேஷன் ஒத்திகை நடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

Update: 2019-02-18 23:00 GMT
கன்னியாகுமரி,

இந்தியாவுக்குள் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து ‘சஜாக்’ ஆபரேஷன் ஒத்திகை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சஜாக்’ ஆபரேஷன் ஒத்திகை நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, அனில்குமார், சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த கண்காணிப்பு பணி மாலை 5 மணி வரை நடந்தது.

சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம் உள்பட 11 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். மேலும், குமரி மாவட்டத்தின் 48 கடற்கரை கிராமங்களிலும் அதிநவீன ரோந்து வாகனத்தின் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 4 ரோந்து படகுகள் பழுதாகி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், மீனவர்களின் விசைப்படகு மூலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, அனில்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் சின்னமுட்டம் முதல் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்