திருப்பூர் எஸ்.ஆர்.நகரில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் கலெக்டரிடம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு

திருப்பூர் எஸ்.ஆர்.நகரில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என கலெக்டரிடம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

Update: 2019-02-18 22:31 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது திருப்பூர் எஸ்.ஆர்.நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எஸ்.ஆர்.நகரில் வீட்டுமனை பிரிவுகள அங்கீகாரம் பெற்று 37 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதுவரை எஸ்.ஆர்.நகர் வடக்கு பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. அந்த பகுதியில் இயங்கி வரும் சாய ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ஆனால் எங்கள் 60-வது வார்டில் உள்ள அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. எனவே அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். 1982-ம் ஆண்டு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட எஸ்.ஆர்.நகர் பகுதிக்கு உரிய ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவ பயன்பாடு மற்றும் கல்வித்துறை பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்போன் கோபுரம்

மங்கலம் ரோடு எஸ்.ஆர். பகுதியில் குமரன் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி தொடங்கும் மற்றும் கல்லூரி வேலை நேரம் முடியும் நேரம் கல்லூரி மாணவிகளை ஏற்றி செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் ஒரே நேரத்தில் பல மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி இடையூறு செய்து வருகிறார்கள். எனவே மினி பஸ்களின் நேர அட்டவணையை சோதனை செய்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் செல்போன் கோபுரம் அமைத்துள்ளனர். எனவே இந்த செல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும். அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மின் இணைப்பு

திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில் “ கட்டிடத்திற்கு அருகில் ஆபத்தான நிலையில் செல்லும் மின்சார கம்பிகளை மாற்றம் செய்ய மின்வாரியத்தில் கட்டணம் செலுத்திய பின்பும் மின்கம்பிகளை மாற்ற வில்லை.

மேலும், பல்வேறு இடங்களில் கூடுதல் பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் மின் இணைப்பு வழங்கி வருகிறார்கள். எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்