கவர்னரை திரும்பப் பெறக் கோரி 6-வது நாளாக தர்ணா; நாராயணசாமிக்கு கெஜ்ரிவால் வாழ்த்து

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமருக்கு காங்கிரசார் தபால் அனுப்பி போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-18 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும் 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை முன்பு கடந்த 13-ந்தேதி முதல் இரவு பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை ஆர்ப்பாட்டம், கருப்புக்கொடி ஏற்றுவது, ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்புவது, சிறை நிரப்பும் போராட்டம், உண்ணாவிரதம் என தொடர் போராட்டம் நடத்துவோம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநிலத்தில் பல இடங்களில் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் கடந்த 16-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று கவர்னர் கிரண்பெடியை திரும்பப் பெறக் கோரி மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர், உள்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் காங்கிரசார் ஈடுபட்டனர். தலைமை தபால் நிலையத்தில் நடந்த இந்த போராட்டத்தில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, கீதா ஆனந்தன், விஜயவேணி, முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், பெத்தபெருமாள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டனர்.

அங்கு அவர்கள் கவர்னரை கண்டித்தும், அவரை திரும்பப் பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

நாராயணசாமியை தி.க. தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேற்குவங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் செல்போனில் தொடர்பு கொண்டு நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், துணை-முதல் மந்திரி மணிஷ்சிசோடியா ஆகியோர் புதுச்சேரி வந்தனர். போராட்டம் நடத்தப்படும் இடத்துக்கு வந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்களை சந்தித்து கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார். அவரை வரவேற்று நாராயணசாமியும், அமைச்சர்களும் சால்வை அணிவித்தனர்.

மேலும் செய்திகள்