பெரம்பலூர் கோவில்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பெரம்பலூர் கோவில்களில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-02-19 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17-ந் தேதி சுவாமி- அம்பாள் திருக்கல்யாண உற்சவமும், புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. நேற்று முன்தினம் 8-ந் திருவிழாவையொட்டி கைலாச வாகனத்தில் வீதிஉலா நடந்தது. இதையடுத்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சந்திரசேகரர்சுவாமி- ஆனந்தவல்லி அம்பாள் உற்சவர் சிலைகள் வண்ண மலர் களால் அலங்கரித்து வைக்கப்பட்டு மேளதாளம் முழங்க தேருக்கு எடுத்துவரப்பட்டது. பின்பு உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது.

இன்று (புதன்கிழமை) கொடிஇறக்கமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை)ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது. 22-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 23-ந் தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் உதவி ஆணையர் மற்றும் தக்கார் முருகையா, கோவில் நிர்வாக அலுவலர் மணி மற்றும் கோவில் திருப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள ஆப்பூர் நல்லேந்திரர் சுவாமி கோவில் மாசிமக பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா, இரவு காப்பு அறுத்தலுடன் விழா நிறைவு அடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் மற்றும் குரும்பலூர் கிராம மக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்