தூத்துக்குடியில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்காணல் ஏராளமான பெண்கள் குவிந்தனர்

தூத்துக்குடியில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்காணல் நேற்று நடந்தது.

Update: 2019-02-19 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 83 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், 2 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 130 அங்கன்வாடி உதவியாளர்கள் ஆக மொத்தம் 215 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அதன்படி அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 5 ஆயிரத்து 183 பேரும், உதவியாளர் பணிக்கு 3 ஆயிரத்து 525 பேரும் என மொத்தம் 8 ஆயிரத்து 708 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது.

இதில் கலந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் காலை முதல் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அங்கு உள்ள பூங்காக்களில் பெண்கள் அமர்ந்து இருந்தனர். மரங்களில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூங்க வைத்தபடியும் இருந்தனர். அதே நேரத்தில் அதிக அளவில் பெண்கள் வந்ததால், போலீசார் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை பூட்டினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்ற பெண்கள் நேர்காணலுக்காக அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் பெண்கள் கூட்டமாக காணப்பட்டது.

நேர்காணலுக்காக உதவி இயக்குனர் அளவிலான அதிகாரி, மருத்துவ அதிகாரி, வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 30 குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவினர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தினர். நேற்று அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 2 ஆயிரத்து 722 பேரும், உதவியாளர் பணிக்கு 2 ஆயிரத்து 182 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 904 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக நேர்காணல் நடக்கிறது.

மேலும் செய்திகள்