மத்திய அரசின் நிதி உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

மத்திய அரசின் நிதி உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2019-02-19 22:15 GMT
கரூர்,

பிரதம மந்திரி கிஷான் சாமானிய நிதி திட்டத்தின்கீழ், 3 தவணையாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வருவாய் துறையினருடான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், சாதாரண விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் முதல் தவணையாக 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் வருகிற மார்ச் 31-ந்தேதி வரையுள்ள காலத்திற்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பெயன்பெற, சிறு மற்றும் குறு விவசாய குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். 2019-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி அன்று வருவாய்த்துறை நில ஆவணங்களில் பட்டாவில் பெயர் உள்ளவராக இருக்க வேண்டும்.

2015-16-ம் ஆண்டு வேளாண்மை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. அரசின் விதிகளுக்குட்பட்ட தகுதியான நபர்கள், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள், வரப்பெற்ற மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான நபர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்