கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.12½ லட்சம் கிடைத்துள்ளது.

Update: 2019-02-19 22:30 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் இந்த உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன்பிறகு நேற்று காலை உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது.

குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், முதுநிலை கணக்காளர் இங்கர்சால், அறநிலையத்துறை ஆய்வாளர் ஆனந்த், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், தலைமை கணக்காளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்களை திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இதில் திருக்கோவில் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பெண் பக்தர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கையாக ரூ.12 லட்சத்து 64 ஆயிரத்து 210 ரொக்கமும், தங்கம் 13.7 கிராம், வெள்ளி 103 கிராம் மற்றும் வெளிநாட்டு பணமும் கிடைத்தது.

பகவதி அம்மன் கோவிலில் நேற்று மாசி மாத பவுர்ணமியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது.

பின்னர், அம்மனுக்கு வைரக்கீரிடம், வைரக்கல் மூக்குத்தி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பல வண்ண மலர்களால் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், வெள்ளி சிம்மாசனத்தில் வைத்து அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

மேலும் செய்திகள்