நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்துள்ளதால் அ.தி.மு.க. வெற்றி உறுதி அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்துள்ளதால் அ.தி.முக. வெற்றி உறுதியாகிவிட்டது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

Update: 2019-02-19 23:30 GMT

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மயிலம்பாடி ஊராட்சியில் ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலையும், 21 சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. பலமான கூட்டணி அமைத்துள்ளதால் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பு இப்போதே உறுதியாகிவிட்டது.

தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் 12 மணி நேரமாக இருந்து வந்தது. அதை உச்சநீதிமன்றம் 2 மணி நேரமாக குறைத்து விட்டது. இதன் காரணமாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கும் சூழ்நிலையில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு ஒரு விரிவான கடிதம் எழுதி உள்ளோம். பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களுக்கு தேர்தலுக்குள் நல்ல முடிவு கிடைக்கும்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் வைகோ வாதாடி வெற்றி பெற்றதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழக அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் பெரிய வக்கீல்களை வைத்து, சரியான ஆதாரங்களைத் திரட்டி ஒரு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகள் இந்த வழக்கின் தீர்ப்பு அரசுக்கு எதிராக வரும் என்று எதிர்பார்த்தார்கள். இது குறித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபடவும் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்களே எதிர்பார்க்காத அளவில் அ.தி.மு.க. அரசு வெற்றியை நிலைநாட்டி உள்ளது. பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும், நிறுவனத்தையும் அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்ளாது.

பிளாஸ்டிக் ஒழிப்பு மக்களிடையே 100 சதவீத வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தபோதிலும் சில ஓட்டல்கள், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இன்னும் பயன்படுத்துவது தெரிய வருகிறது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பவானி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, பவானி நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

மேலும் செய்திகள்