8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-02-19 23:30 GMT
அரூர்,

சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கின. இதையொட்டி நிலங்களை அளவீடு செய்து கல் நடும் வேலை நடைபெற்றது. ஆனால் 8 வழிச்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பல்வேறு தரப்பினரும் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி போராட்டங்களும் நடைபெற்றன.

இந்தநிலையில் அரூர் பகுதி விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நில உரிமையாளர்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று காலை விவசாயிகள் அரூர் பழையப்பேட்டை பைபாஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது 8 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க மாட்டோம் என கோஷமிட்டவாறு பதாகை, கோரிக்கை அட்டை களை ஏந்தி வந்தனர். பின்னர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூறும்போது, ஏற்கனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்ல கள்ளக்குறிச்சி, தர்மபுரி, அரூர், வாணியம்பாடி வழியாக சாலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் விவசாய நிலங்களை அழித்து புதியதாக சாலை அமைத்து உணவிற்கு அலையவிடும் நிலைக்கு மக்களை ஆளாக்கும் இந்த திட்டத்திற்கு நிலத்தை கொடுக்கமாட்டோம், என்றனர். பின்னர் அதிகாரிகளிடம் மனுக்கள் எதுவும் கொடுக்காமல் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்