தேசிய அளவில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-02-20 22:15 GMT
தேனி,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் படிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். தற்போது 2018-19-ம் நிதியாண்டில் தலைசிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க, ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

கடந்த 1-7-2017 முதல் 30-6-2018 வரையுள்ள கால கட்டத்தில் தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர் கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். குழுப் போட்டிகளாக இருந்தால் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டியாக இருந்தால் முதல் 3 இடங்களையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேசிய அளவிலான போட்டியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங் கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றால் போட்டிகள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை பெற தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 12-ந் தேதி கடைசி நாள் ஆகும். இத்தகவலை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்