‘பேஸ்புக்’ மூலம் வலையில் விழ வைத்து பண்ணை வீட்டில் மாணவிகள்- பெண்களை சீரழித்த கும்பல்

‘பேஸ்புக்’ மூலம் வலையில் விழ வைத்து பண்ணை வீட்டில் மாணவிகள்-பெண்களை சீரழித்த கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உல்லாச காட்சிகள் பதிவாகி உள்ளது.

Update: 2019-02-28 00:30 GMT
பொள்ளாச்சி, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25), சிவில் என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் ‘பேஸ்புக்‘ (முகநூல்) மூலம் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அங்கு சபரிராஜன் அவரது நண்பர்களான சதீஷ் (28), திருநாவுக்கரசு (25), வசந்தகுமார் (27) ஆகியோருடன் காத்திருந்தார். பின்னர் மாணவி வந்ததும், அவரை காரில் ஏற்றிக்கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர்.

கார் சிறிது தூரம் சென்றதும், சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த மாணவியை காரில் இருந்து அவர்கள் இறக்கி விட்டு சென்றனர். இதற்கிடையே மாணவியின் ஆபாச படத்தை வைத்து அவர்கள் 4 பேரும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதன் பின்னர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் நாகராஜ் என்கிற பார் நாகராஜ் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் பைனான்சியராக வேலை பார்த்து வருகிறார். நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் ஊத்துக்காடு ரோடு ரெயில்வே கேட் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர்.

மாணவிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசையும், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆச்சிப்பட்டி மணிகண்டன் (25) என்பவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரைக்கும் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சபரிராஜன் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பது போன்று நடித்து ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு காரில் அழைத்து செல்வார். தனி அறைக்கு மாணவிகளை அழைத்து சென்று உல்லாசமாக இருப்பதை செல்போனில் படம் பிடித்து மற்ற 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முதலில் வரவில்லை. தற்போது ஒவ்வொருவராக புகார் கொடுக்க வரத்தொடங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து வருகிறோம். எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஒரு வீடியோவில் சபரிராஜன் முதலில் ஒரு கல்லூரி மாணவியை அறைக்குள் அழைத்து செல்கிறார். அந்த மாணவி பாதி ஆடைகளை களைந்த நேரத்தில் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் செல்போனில் படம் பிடித்தவாறு உள்ளே நுழைகின்றனர். அந்த மாணவி அவர்களை பார்த்ததும் அண்ணா தெரியாமல் வந்து விட்டேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறுகிறாள்.

ஆனால் அவர்கள் மாணவியை விடாமல் துன்புறுத்துகின்றனர். இதேபோன்று கொடூரமாக மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் அதை வீடியோவாகவும், புகைபடமாக எடுத்து வைத்துள்ளனர். இவர்கள் வைத்திருந்த செல்போன்களில் 30-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளது.

மேலும் ஒரு சில பெண்களை அந்த வீடியோவை காண்பித்து மீண்டும் வர வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது. இதுதவிர அவர்கள் அழைத்து வரும் பெண்களிடம் உள்ள நகை, பணத்தையும் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீசார் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் திருநாவுக்கரசின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநாவுக்கரசு பிடிபட்டால் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? இதுவரைக்கும் எத்தனை பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். மேலும் திருநாவுக்கரசு கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது போடப்பட்டு உள்ள சட்டப்பிரிவுகளை மாற்றி வழக்குப்பதிவு செய்யப்படலாம். மேலும் கொலை மிரட்டல் வழக்கில் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க தாலுகா போலீசார் மற்றும் கிழக்கு போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்