மோகனூர் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மோகனூர் அருகே 2 கோவில்களில் புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

Update: 2019-02-27 22:15 GMT
மோகனூர், 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மோகனூர் அருகே உள்ள வளையபட்டி என்ற ஊரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகிலேயே விநாயகர் கோவிலும் உள்ளது. இந்த கோவில்களில் தினசரி பூஜை நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 2 கோவில்களின் உண்டியல்களும் உடைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் இரவு கோவில்களுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்று இருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதால் அதில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும், தங்க, வெள்ளி நாணயங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது என அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கண்காணிப்பு கேமரா இல்லாததால் கோவில்களில் புகுந்த மர்ம ஆசாமிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்