பொள்ளாச்சியில் கோவில் திருவிழாவுக்கு வந்த யானையை லாரியில் இருந்து இறக்கிய போது தவறி விழுந்தது 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

கோவில் திருவிழாவுக்கு வந்த யானையை லாரியில் இருந்து இறக்கிய போது தவறி விழுந்தது. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை பத்திரமாக மீட்டனர்.

Update: 2019-03-16 22:15 GMT
பொள்ளாச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சக்தி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் குலாபி என்ற பெண் யானையை வளர்த்து வருகின்றார். இந்த யானைக்கு 56 வயதாகிறது. இந்த நிலையில் யானையின் உரிமையாளரான பாஸ்கரன், பொள்ளாச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், உடுமலை ஆகிய இடங்களில் நடைபெறும் கஜபூஜைக்கு இந்த யானையை அழைத்து செல்வதற்கு முதன்மை வனஉயிரின காப்பாளரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தார். இதையடுத்து 16-ந்தேதி (நேற்று) முதல் வருகிற 26-ந்தேதி செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கஜபூஜையில் கலந்துகொள்ள யானை லாரியில் அழைத்து வரப்பட்டது. யானையுடன் பாகன் அக்பர் அலி, உதவியாளர் கிருபா ஆகியோர் வந்தனர்.

பின்னர் மகாலிங்கபுரத்தில் கயிறு வாரியம் எதிரே இருந்த மண் மேட்டில் யானையை இறக்க முடிவு செய்தனர். அதன்படி லாரியின் பின்புற கதவை திறந்து மணல் மீது வைத்தனர். பின்னர் யானை பாகனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு லாரியில் இறங்கியது. அப்போது மணல் சரிந்ததால் யானை கால் தவறி கீழே விழுந்தது. இதனால் பதறிபோன பாகன் மற்றும் உதவியாளர்கள் யானையை எழுந்திருக்க வைக்க முயற்சி செய்தனர். யானைக்கு வயதாகி விட்டதால், எழுந்திருக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் யானையை சுற்றி இருந்த மணலை மண்வெட்டியால் வெட்டி அப்புறப்படுத்தினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் யானையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பயத்தால் கலக்கமடைந்த யானைக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கினர். இதுகுறித்து வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வனபாதுகாப்பு படை வனச்சரகர் மணிகண்டன், பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மேலும் மகாலிங்கபுரம் போலீசார் வந்து பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். யானையை சிலர் ஒன்று சேர்ந்து ஒருபுறம் தூக்கினார்கள். யானையை அசைக்க கூட முடியவில்லை.

பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. யானையின் கழுத்து வழியாக பெல்ட்டும், பின்புற உடலில் ஒரு பெல்ட்டும் அணிவிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் யானையை மெதுவாக தூக்கினார்கள். யானை மெதுவாக எழுந்திருக்க முயற்சி செய்தது. அப்போது பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் யானை கீழே விழுந்ததில் காலில் அடிபட்டதால் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை. பொக்லைன் எந்திரம் மூலம் யானை சிறிது நேரம் தாங்கி பிடிக்கப்பட்டது. யானை நின்றதும், அதன் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அதன்பிறகு யானை சகஜ நிலைக்கு திரும்பியது.

11 மணிக்கு விழுந்த யானை, 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 1 மணிக்கு யானை பத்திரமாக மீட்கப்பட்டது. யானையை அருகில் உள்ள மரத்தடி நிழலுக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து தாகம் தீர்க்க தண்ணீர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் வாங்கி வந்த வாழைப்பழம், பிஸ்கட், தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டது. ஆனால் தர்பூசணி பழத்தை சாப்பிட மறுத்து விட்டது. யானை விழுந்த தகவல் பரவியதை தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து யானை முன் நின்று புகைப்படம் எடுத்து சென்றனர். பொள்ளாச்சியில் யானை கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், யானைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். யானையை லாரியில் இருந்து இறக்கும் போதும், ஏற்றும் போதும் உயரமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் லாரியின் பின்புறம் திறந்து விடப்பட்ட கதவு அந்த இடத்தில் சரியாக இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஆனால் பொள்ளாச்சியில் யானை இறக்கும் போது சிறிய மண் திட்டில் லாரியை நிறுத்தி இறக்கி உள்ளனர். மேலும் அந்த மணல் திட்டு கடினமானதாக இல்லை. இதனால் யானையை இறங்கியதும் மண் சரிந்து யானை விழுந்து விட்டது. யானைக்கு எந்த பாதிப்பு ஏற்படாததால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் யானையை திருச்சிக்கு மீண்டும் அழைத்து செல்ல வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்