சீர்காழியில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.11½ லட்சம் பறிமுதல்

சீர்காழியில், உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.11½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-16 23:00 GMT
சீர்காழி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு முக்கூட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலரும், சமூக பாதுகாப்பு துறை தனி தாசில்தாருமான இந்துமதி தலைமையில், மண்டல தாசில்தார் பாபு மற்றும் போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும்படை குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மேலச்சாலையில் இருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் சீர்காழி அருகே உள்ள கீழச்சாலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த சேகர்(வயது 57), அவருடைய மனைவி ரேவதி உள்பட 4 பேர் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் எடுத்து சென்றது தெரிய வந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து சீர்காழியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சேகரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்