போடிபட்டி ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

போடிபட்டி ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-03-16 22:00 GMT
உடுமலை,

உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது போடிபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள், போடிபட்டி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் கணேஷ்பூபதியை பணி இடம் மாற்றம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியத்திடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

உடுமலை ஊராட்சி ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி மன்ற செயலாளர் கணேஷ்பூபதி மீது 2017 முதல் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி கணேஷ்பூபதி, சின்னக்குமாரபாளையம் ஊராட்சிக்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணி மாறுதல் உத்தரவை மதிக்காமல் போடிபட்டி ஊராட்சியிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போடிபட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்