வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு

வேட்பாளரின் குற்றப் பின்னணி விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கான அறிவுரைகள் பற்றிய விளக்க கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.

Update: 2019-03-17 23:00 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்பவர்களுக்கான அறிவுரைகள் பற்றிய விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் நபர், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணைப்படி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல், 26-ந் தேதி வரை அரசு வேலை நாட்களில் மனு தாக்கல் செய்யலாம். 23-ந் தேதி மற்றும் 24-ந் தேதி ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வேட்பு மனுக்கள் பெறப்படாது. வேட்பு மனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் டெபாசிட் தொகையாக ரூ.12 ஆயிரத்து 500 செலுத்துவதோடு சாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கினை தொடங்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு எண்ணை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு ஒரு தொகுதியின் வாக்காளராக இருப்பின் அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து சான்றினை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனுதாக்கல் செய்யும் நபர் அரசு அலுவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், பணி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழை துறை தலைவரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளருக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அல்லது தண்டனை பெற்றிருந்தால் அது தொடர்பான விவரங்கள் அடங்கிய உறுதிமொழி படிவத்தை வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வெவ்வேறு நாட்களில் செய்தித்தாள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் 3 நாட்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்.

தேர்தலுக்காக தற்காலிகமாக அமைக்கப்படும் கட்சி அலுவலகங்களை அரசு கட்டிடம், அரசுக்கு சொந்தமான இடங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் அருகே அமைக்கக் கூடாது. பொது இடங்களில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள், சுவரொட்டிகள் போன்றவை வைக்க கோர்ட்டு தடை விதித்துள்ளது. எனவே இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வாக்கு சேகரிப்பு பணியிலும், தேர்தல் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் வேலூர் ஏலகிரி அரங்கில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குகள் பதிவாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய வாழ்த்து செய்தி மடல் வழங்கும் விழா நடந்தது.

அதில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு வாழ்த்து செய்தி மடல்களை வெளியிட்டு பேசுகையில், ‘வாக்காளர்கள் பரிசு அல்லது பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க கூடாது. அனைவரும் நியாயமான முறையில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

விழாவில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்