கும்பகோணம் அருகே வாகன சோதனையில் ரூ.1¾ லட்சம் சிக்கியது ஆவணத்தை காட்டியதால் திரும்ப ஒப்படைப்பு

கும்பகோணம் அருகே வாகன சோதனையில் ரூ.1¾ லட்சம் சிக்கியது. அந்த தொகைக்கான ஆவணத்தை காட்டியதால் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

Update: 2019-03-17 23:00 GMT
கும்பகோணம்,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது. கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாரிகள் இரவு, பகலாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கடைத்தெருவில் நேற்று நிலையான கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரி மதுசூதனன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டபோது, காரில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அதிகாரிகளிடம் சிக்கியது.

அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த திருச்சி பால்பண்ணை பகுதியை சேர்ந்த மஸ்தான் மகன் சபீர் (வயது32) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சபீர் பழவியாபாரி என்பதும், அவர் காரில் எடுத்து வந்தது கும்பகோணம் பகுதியில் உள்ள கடைகளில் வசூல் செய்யப்பட்ட பணம் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், கடைகளில் பணத்தை வசூல் செய்ததற்கான ஆவணத்தை அதிகாரிகளிடம் காட்டினார். ஆவணத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் பணத்தை சபீரிடம் திரும்ப ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்