மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2019-03-17 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மேலவீதியில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை (வில்லைகளை) ஒட்டினார். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் பயணித்த பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராம பகுதிகளில் வாக்களிப்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயது நிறைந்த மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.


நாம் வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை. அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ந் தேதி நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்கினை சரியாகப் பயன்படுத்த வேண்டும். எதிர்காலம் ஏற்றம் பெறவும், உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம் என்பதை உணர்ந்து தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர ஸ்கூட்டருடன் கலந்து கொண்ட இந்த ஊர்வலம் மேலவீதியில் தொடங்கி வடக்கு வீதி வரை சென்றடைந்தது. இதில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, உதவி கலெக்டர் முருகதாஸ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், திருவாரூர் தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்