தேனி அருகே எண்ணெய் ஆலையில் தீ - 2 தொழிலாளர்கள் கருகினர்

தேனி அருகே எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகினர்.

Update: 2019-03-18 23:45 GMT
தேனி,

தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவர், தேனி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இரவு 10.30 மணி அளவில் திடீரென எண்ணெய் ஆலையில் தீப்பிடித்தது.

சிறிதுநேரத்தில் மளமளவென தீ பரவியது. இரவை பகலாக்கும் வகையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம் தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்பிறகு பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

ஆலையில் தீப்பிடித்து எரிந்தபோது உயிர் பிழைப்பதற்காக தொழிலாளர்கள் வெளியே ஓடி வந்தனர். இதில் 2 தொழிலாளர்கள் தீயில் சிக்கி உடல் கருகினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே எண்ணெய் ஆலையின் அருகே உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) தீயில் வெடித்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கும் என்று கருதப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்