குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை

குமரியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-20 23:00 GMT
நாகர்கோவில்,

கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆலஞ்சி பகுதியில் கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரி சோபனாராணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது.

அந்த காரை ஓட்டி வந்தவர் வாணியக்குடியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஆவார். அவர் மேல்மிடாலத்தில் இருந்து வாணியக்குடியில் உள்ள நிதி நிறுவனத்துக்கு பணத்தை எடுத்து செல்வதாக தெரிவித்தார். ஆனால் அந்த பணத்துக்கு எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த பணத்தை கிள்ளியூர் தாசில்தார் கோலப்பனிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை சரிபார்த்து கருவூலத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து, நிதி நிறுவன அதிபரிடம் பணத்துக்கான ஆவணங்களை காட்டி பெற்று செல்லுமாறு கூறினார்.

இதேபோல் குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பரசேரி பகுதியில் தாசில்தார் விஜயபிரபா தலைமையிலான நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ரூ.61 ஆயிரத்து 500 வைத்திருந்தார்.

அந்த பணத்தை அவர், வட்டிக்கு கொடுத்து வசூலித்த பணம் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு எந்த ஆவணமும் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்