மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம்

தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு தொடர்பாக மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி முதல்வர்களுடன் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2019-03-20 23:00 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக, கல்லூரி முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காகவும், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளதை தொடர்ந்து தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கல்லூரி வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பி எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத மாணவ, மாணவிகள் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) புதிதாக விண்ணப்பம் அளித்து புதிய வாக்காளர்களாக சேர்ந்து கொள்ளலாம். 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தவறாமல் வாக்களித்திட வேண்டும்.

பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது கல்லூரியில் பயின்றாலும் அவர்களையும் வாக்காளர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் மாவட்டத்துக்கு அனுப்பி புதிய வாக்காளர்களாக சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் தங்களது முகவரி மற்றும் வேறு ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் அதற்குரிய படிவத்தை வழங்கி மாற்றம் செய்து கொள்ளலாம். கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படித்தவர்கள், தேர்தலில் பங்கு கொண்டு வாக்களிப்பதன் மூலம் உண்மையான ஜனநாயகம் மலர வாய்ப்பு உள்ளது. எனவே, கல்லூரி மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து கட்டாயமாக வாக்களித்திட கல்லூரி நிர்வாகங்கள் தேர்தலில் பங்காற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்