குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-20 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயல் பகுதியில் கடந்த 21 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெகு தொலையில் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அப்போது அந்த பகுதியில் குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்வாதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை உடைப்பை சரிசெய்யவில்லை. குடிநீரும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்த பொதுமக்கள் பால்பண்ணை ரவுண்டானாவில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்குவதாக தெரிவித்தனர். இதை பொதுமக்கள் ஏற்காமல் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து, குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி மறியலை கைவிடாமல் அங்கேயே மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பால்பண்ணை ரவுண்டானா சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்