சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பொன்னேரி அடுத்த ஆட்டந்தாங்கல் கிராமத்தின் இடுகாடு மற்றும் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-20 23:00 GMT

பொன்னேரி,

பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆட்டந்தாங்கல் கிராமம். இங்கு பாலமுருகன் நகர், பாலகணேசன் நகர், மருதுபாண்டி நகர், விவேகானந்தர் நகர் உட்பட பல பகுதிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 200 ஆண்டுகளாக உள்ள இடுகாடு மற்றும் சுடுகாடு பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த இடுகாடு சுடுகாடு அமைந்துள்ள நிலத்தை தனியார் சிலர் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆட்டந்தாங்கலில் உள்ள கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பு சுடுகாடு இடத்தை மீட்க வந்து ஒத்துழைப்பு அளிக்குமாறு துண்டுபிரசுரங்களை வழங்கினர். பின்னர் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஏராளமானோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

கோட்டாட்சியர் நந்தகுமாரை சந்தித்து சுடுகாடு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

இம்மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கோட்டாட்சியர் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்