விபத்தில் இறந்த சிறைக்காவலர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை

விபத்தில் இறந்த சிறைக்காவலர் உடலுக்கு ஆயுதப்படை போலீசார் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

Update: 2019-03-20 23:23 GMT
வேலூர்,

காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் கண்ணன்பாபு (வயது 43). இவர் வாலாஜாவில் உள்ள சப்-ஜெயிலில் முதல்நிலை தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி எஸ்தர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லிஸ்சிரூபி (10) என்ற மகளும், சந்தோஷ் (6) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 7-ந் தேதி கண்ணன்பாபு பணி முடிந்தபின் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். ரத்தினகிரி அருகே சாலை விபத்தில் சிக்கிய அவர் படு காயத்துடன் சுயநினைவிழந்த நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் பின்னர் வீடு திருப்பினார். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள், கண்ணன் பாபுவுக்கு போலீஸ் மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி அடக்கம் செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்படி நேற்று காலை அண்ணாசாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யும் நிகழ்வு நடந்தது. அப்போது ஆயுதப்படை போலீசார் 21 குண்டுகள் முழங்க கண்ணன்பாபுவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் சிறைத்துறையில் பணியாற்றும் காவலருக்கு போலீசார் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தியது இதுவே முதல் முறை என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்